
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவாது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் 10 ஓவர்கள் விக்கெட் இல்லாமல் விளையாடிய இந்த இணை 55 ரன்களைச் சேர்த்திருந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் ஒரு ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 20 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் இப்போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளனர்.