
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 27, 29 மற்றும் பிப்ரவி 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஒருநாள் தொடரை இந்திய அணி இலகுவாக கைப்பற்றியிருந்தாலும், டி.20 தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதால் இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் பலர் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்து அணியை நாளை (27-1-23) எதிர்கொள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
காயம் காரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் நியூசிலாந்து அணியுடனான டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதால், முதல் டி20 போட்டியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது. உள்ளூர் தொடர்களில் அதிகமான ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகள் படைத்ததன் மூலம் பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவர் முதல் டி20 போட்டியிலேயே வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.