
நியூசிலாந்து அணி இந்தியா வந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் என்ன கேட்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து பீல்டிங் தேர்வு செய்தார். இது சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக காரணமாயிற்று. இதையடுத்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது ஷமி ஓவரில் பின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.