
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி 349 ரன்களை குவித்து, இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ராய்பூரில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ரோஹித் சர்மா 51, ஷுப்மன் கில் 40 ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். அடுத்து விராட் கோலி 11 (9), இஷான் கிஷன் 8 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை எடுத்த நிலையில், இந்திய அணி 20.1 ஓவர்களில் 111/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.