
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
அதன்படி இந்திய அணிக்கு இஷான் கிஷான் - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் வழக்கம் போல இஷான் கிஷான் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - ராகுல் திரிபாதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.