இது மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று - மிட்செல் சாண்டனர்!
நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும் என நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியைப் பெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் யாருமே 20 ரன்களை அடிக்கவில்லை. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 19, சாப்மேன் 14, பிரேஸ்வெல் 14 ஆகியோர்தான் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள். இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 99/8 ரன்களை மட்டும்தான் சேர்த்தது. ஷிவம் மாவியை தவிர அனைத்து பௌலர்களும் விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் 11, இஷான்கிஷன் 19 ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சூர்யகுமார் யாதவ் 26, ஹார்திக் பாண்டியா 15 ஆகியோர் நிதானமாக விளையாடியதால், இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 101/4 ரன்களை சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இரண்டு அணிகளும் ஒரு சிக்ஸரை கூட அடிக்கவில்லை.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய நியூசிலாந்து அணிக் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “இது மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று. எங்கள் அணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி, கடைசிவரை போராடினார்கள். நாங்கள் 10-15 ரன்களை கூடுதலாக அடித்திருந்தால், வெற்றிவாய்ப்பு எங்களுக்கு இருந்திருக்கும். ஹார்திக், சூர்யகுமார் யாதவ் இருவரும் அடிக்கடி சிங்கில் எடுத்து சிறப்பாக விளையாடிராகள். நாங்கள் 16-17 ஓவர்கள் ஸ்பின்னர்களுக்குத்தான் கொடுத்தோம். இது வித்தியாசமாக, புதுவிதமாக இருந்தது” எனக் கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now