
இந்திய அணியின் எதிர்கால வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஷுப்மன் கில். தற்போது 23 வயது ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு, 13 டெஸ்டுகள், 18 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 87 பந்துகளில் தனது 3ஆவது ஒருநாள் சதத்தை எடுத்தார் ஷுப்மன் கில். அத்துடன் நில்லாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 145 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார்.
இன்று, 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில். இதன்மூலம் 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த ஷுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார்.