
கொழும்புவிலுள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் பவுலர்களை ஆட்டம் காணச் செய்த இந்த இணையில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர் அடித்து 100 பந்துகளில் சதத்தை பதிவு செய்து ‘மாஸ்’ காட்டினார் கேஎல்ராகுல். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் சதமடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.