
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலம் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிஷான், ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய சுப்மன் கில் அடுத்து 3 ரன்கள் கூடுதலாக எடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று சொல்லப்படும் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி அடித்து 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.