இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது - தசுன் ஷனகா!
இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 116 ரன்களும், கடைசி வரை இலங்கை வீரர்களை கதி கலங்கவிட்ட விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது.
இதன்பின் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் மூன்று வீரர்களும் முகமது சிராஜின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இலங்கை அணியில் வெறும் மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் வெறும் 73 ரன்களுக்கே ஆல் அவுட்டான இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலங்கை அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டனான தசுன் ஷானகா, தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தசுன் ஷானகா பேசுகையில், “இந்திய அணியுடனான இந்த மோசமான தோல்வி ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது. இந்த தோல்வி மிக மோசமானது என்றாலும் விளையாட்டில் இது போன்று நடப்பது இயல்பு தான், ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவரும் நிறைய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்.
ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பேட்டிங் செய்வது எப்படி, பந்துவீசுவது எப்படி என்பதையும் வீரர்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறிவிட்டனர். சர்வதேச போட்டிகள் சவாலானது, எனவே அதற்கு ஏற்றவாறு விளையாடுவது அவசியம். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now