
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், 20 வீரர்கள் கொண்ட புதிய இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஒரே நேரத்தில் இரண்டு இந்திய சர்வதேச அணிகள் தற்போது விளையாடி வருவது வரலாற்றில் அரிதாக நடக்கும் நிகழ்வாகும்.
முன்னதாக, இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் தரவு பகுப்பாய்வாளர் நிரோஷன் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், இத்தொடர் ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 18ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ஆம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ஆம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.