
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் அகமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. இரு தொடர்களுக்கும் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
ஒருநாள் தொடருக்காக அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்ஸர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால், இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மயங்க் அகர்வால் அகமதாபாத்தில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நானும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவோம் என இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.