வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா 6 ரன்களிலும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 39 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து கேஎல் ராகுலும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இனை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், 7ஆவது விக்கெட்டிற்கு 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர்.