
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது.
இந்நிலையில் தான் இத்தொடர் கம்பேக் கொடுக்கும் முயற்சியாக முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி சொந்த மண்ணை விட வெளிநாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவிப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளியது என்பது போல் கூறியுள்ளது ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.