தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய ஏ ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆயுஷ் பதோனி, விப்ராஜ் நிகாம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அணியின் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷானும், பிரப்ஷிம்ரன் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.