
துபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் அண்டர்-19 ஆசியக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய நேபாள் அணிக்கு இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராஜ் லிம்பானி ஆரம்பத்திலிருந்தே துல்லியமாக பந்து வீசி மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.
அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தீபக் போஹரா 1, உத்தம் மகர் 0, கேப்டன் தேவ் கனல் 3 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதற்கிடையே ஆராத்யா சுக்லா வேகத்தில் மற்றொரு தொடக்க வீரர் அர்ஜுன் குமால் 7 ரன்னில் அவுட்டானதால் ஆரம்பத்திலேயே நேபாள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.
அப்போது இடைவெளி விடாமல் மீண்டும் தீபக் தும்ரே 0, திபக் போஹரா 7, திபெஷ் கண்டெல் 4, சுபாஷ் பண்டாரி 2, ஹேமந்த் தாமி 8 என அடுத்து வந்த அனைத்து வீரர்களையும் லிம்பானி தம்முடைய அதிரடியான வேகத்தால் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார். இதனால் 22.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நேபாள் வெறும் 52 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராஜ் லிம்பானி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.