
முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் முன்னேறின. நேற்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் சாம்ம்பியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு காம்ரன் அக்மல் - சர்ஜீல் கான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சர்ஜீல் கான் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மக்சூத் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் மற்றொரு தொடக்க வீரரான காம்ரன் அக்மலும் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் யுனிஸ் கானும் 7 ரன்களுடன் வெளியேறி ஏமாற்றத்தைக் கொடுத்தார். பின்னர் இணைந்த சோயப் மாலில் - மிஸ்பா உல் ஹக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் இதில் மிஸ்பா உல் ஹக் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேற, அடுத்து வந்த அமெர் யாமினும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சோயப் மாலிக் 3 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.