எல்எல்சி 2023 எலிமினேட்டர்: கெயில், ஓ பிரையன் போராட்டம் வீண்; குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது இந்தியா கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எல்எல்சி எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஓய்வு பெற்ற விரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எட்வர்ட்ஸ் - கேப்டன் கவுதம் கம்பீர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் எட்வர்ட்ஸ் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பீட்டர்செனும் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கேப்டன் கௌதம் கம்பீர் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Trending
இதையடுத்து வந்த பாவெல் 28, பென் டங்க் 30, சிப்லி 35, நர்ஸ் 12 ரன்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர்கள் முடிவில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைக் குவித்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எம்ரிட், பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு கிறிஸ் கெயில் - ஜாக் காலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கிறிஸ் கெயில் ஒருமுனையில் அதிரடியாக விளையாட, மறுபக்கம் ஜாக் காலிஸ் 11 ரன்களுக்கும், ரிச்சர்ட் லீவி 17 ரன்களுக்கும், அபிஷேக் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதையடுத்து கெயிலுடன் இணைந்த கெவின் ஓ பிரையன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 57 ரன்களைக் குவித்த கெவின் ஓ பிரையன் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த கிறிஸ் கெயில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 84 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ரஸ்டி தெரொன், இஷ்வார் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் இத்தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றோடு வெளியேறியது.
Win Big, Make Your Cricket Tales Now