
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீராங்கனை தனுஜா கன்வருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஸ்மிருதி மந்தனா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலாதா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இந்திய மகளிர் அணி 52 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்ஸர்களும் விளாசினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.