மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி!
அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றை நெருங்குகிறது. இதில் குரூப் ஏ-யிலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குரூப் பி-யில் இங்கிலாந்து அணி அரையிறுதிச்சுற்று எட்டியது.
இந்நிலையில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ளது இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
Trending
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில் ஒருமுனையில் ஷஃபாலி வெர்மா (24), ஹர்மன்ப்ரீத் கௌர்(13), ரிச்சா கோஷ் (0), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (19) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து விளையாடிய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அயர்லாந்து தரப்பில் கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து எமி ஹண்டர், ஆர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த கேபி லூயிஸ் - லாரா டெலானி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களைச் சேர்த்த நிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறி அசத்தியுள்ளது. அரையிறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now