
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் முன்னேறின. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்படி வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர் 6 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய இஷ்மா தஞ்சிம் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை முர்ஷிதா கதுமும் 4 ரன்களுடன் நடைடைக் கட்டினார். இதனால் வங்கதேச மகளிர் அணி 21 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து தடுமாறிய வங்கதேச மகளிர் அணியை கரைசேர்க்கும் முயற்சியில் அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ருமானா அஹ்மத், ரபேயா கான் மற்றும் ரிது மோனி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிகர் சுல்தானாவும் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய நஹிதா அக்தரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.