
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று கொழும்பு நகரில் தொடங்கிய சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கியமான போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. ஏற்கனவே இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வெளியான வானிலை அறிக்கையில் போட்டியின் போது மழை குறுக்கிடும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டேவில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கையை வைத்திருந்தது.
அதோடு ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியினை முழுமையாக காண வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்ததால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் டேவை (செப்டம்பர் 11) அறிவித்திருந்தது. அந்த வகையில் செப்டம்பர் 10-ஆம் தேதி போட்டி மழையால் தடை பட்டால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய போட்டி ஆரம்பித்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்திருந்த வேளையில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நடைபெற சாத்தியமில்லாமல் போனது. அதன் காரணமாக இன்று போட்டி கைவிடப்பட்டதாகவும் இன்று ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.