
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.அந்தவகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷிவம் தூபே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கொண்டு அவருக்கு மாற்றாக திலக் வர்மா இந்திய டி20 அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.