இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் - ஜாகீர் கான்!
இந்தியாவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறித்த கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளை தொடங்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் மட்டுமே உறுதியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்று பலரால் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று அணிகள் தவிர்த்து கிரிக்கெட் மட்டத்தில் மற்ற அணிகள் பற்றிய பேச்சுகள் பெரிய அளவில் ஏதும் கிடையாது. இதற்கு ஏற்றபடி இந்த மூன்று அணிகளில் செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அவர்கள் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து வருகிறார்கள். அவர்களது தாக்குதல் பாணி கிரிக்கெட் உலகம் முழுவதும் தனி ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை தொடர் என்றால் எப்பொழுதும் மிகச் சிறப்பாக செயல்படும் ஒரு அணியாக இருக்கிறது.
Trending
கடந்த முறை இருந்தது போல் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி இந்த முறை சிறப்பாகவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என பலமாக இருக்கிறது. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினாலும், இந்திய வீரர்கள் தற்போது சிறந்த பார்ம் மற்றும் உடல் தகுதியில் இருப்பதாலும், உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியில் முதன்மை இடம் இந்திய அணிக்கு தரப்பட்டு இருக்கிறது.
தற்பொழுது இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், “எல்லோரும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த முறை தென் ஆப்பிரிக்கா கணிக்க முடியாத ஒரு அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஐசிசி தொடர்கள் என்று வரும் பொழுது தென் ஆப்பிரிக்காவின் வரலாறு சிறப்பாக இல்லை. ஆனால் எப்படியோ அவர்கள் இறுதியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது, அவர்கள் எல்லோருக்கும் ஆபத்தான அணியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் அணியில் உள்ள சில வீரர்கள் இந்திய நிலைமைகளில் சிறப்பாக செயல்பட்டால், அவர்கள் நிச்சயம் உலகக்கோப்பையில் ஒரு முக்கிய சக்தியாக இருப்பார்கள்.
லீக் கட்டத்தில் நீங்கள் முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தால், பட்டத்தை வெல்வதற்கு உங்களுக்கு இரண்டு நாட்கள் நல்ல கிரிக்கெட் இருந்தால் போதும். மேலும் இது போன்ற சூழ்நிலையில் யார் யாரை வேண்டுமானாலும் வெல்ல முடியும். இங்கு லீக் கட்டத்தில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு சிறப்பாக செயல்பட வேண்டியதுதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now