இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா? - ரிக்கி பாண்டிங் பதில்!
தற்போது உள்ள நிலைமையில் இருந்து இந்திய அணி கட்டாயம் ஜெயிக்க முடியாது என இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபின் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் அடித்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்கள் அடித்து களத்தில் இருந்தனர்.
இதியடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த டிராவிஸ் ஹெட் 163 ரன்களுக்கும், ஸ்மித் சதம் கடந்து 121 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். அடுத்த அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 48 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாத அளவிற்கு பேட்டிங்கை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்கள், சுப்மன் கில் 13 ரன்கள் என இருவரும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து மோசமான துவக்கம் கொடுத்தனர்.
நல்ல ஃபார்மில் இருந்த புஜாரா 14 ரன்கள், விராட் கோலி 14 ரன்கள் என ஆட்டமிழக்க 71 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. ரஹானே மற்றும் ஜடேஜா இருவரும் ஐந்தாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 71 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 48 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தபிறகு போட்டி குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங், “இந்த இடத்திலிருந்து இந்திய அணி மீள முடியுமா?” என்கிற கேள்விக்கு பதில் கொடுத்தார்.
அப்போது பேசிய அவர், “கண்டிப்பாக முடியாது இந்த பிட்ச் சற்று வறட்சியாக காணப்படுகிறது. ஆங்காங்கே பவுன்ஸ் அதிகமாகவும் மற்றப்பக்கம் சற்று குறைவாகவும் இருக்கிறது. பவுன்ஸ் சீரானதாக இல்லை. இது போன்ற கண்டிஷனில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அத்துடன் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளையும் இழந்து விட்டனர். இந்த சூழலில் இருந்து இந்திய அணி மீண்டு வந்து வெற்றியைக் காண்பது முடியாத காரியமாக உணர்கிறேன். ஆஸ்திரேலிய அணி டிரைவர் சீட்டில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now