பேட்டிங் ஆர்டரை சரித்த லுங்கி இங்கிடி; தடுமாற்றத்தில் இந்தியா - கணொளி!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றின், இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போட்டியில் கிடைக்கப் போகும் வெற்றி, தோல்விதான் மூன்று அணிகளின் அரையிறுதி வாய்ப்பை கிட்டதிட்ட உறுதி செய்யும்.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவும், தென் ஆப்பிரிக்க அணியில் தப்ரைஸ் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடியும் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் முதல் ஓவர் மெய்டனாக, இரண்டாவது ஓவரில் ரோஹித் சர்மா சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை தொடங்கிவைத்தார்.
அதன்பின் வெய்ன் பார்னெல் வீசிய மூன்றாவது ஓவரில் கேஎல் ராகுல் தனது பங்கிற்கு ஒரு சிக்சரைப் பறக்கவிட்டார். அதன்பின் பந்துவீச வந்த லுங்கி இங்கிடி தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சிகொடுத்தார்.
அதன்பின் இன்றைய போட்டியிலாவது ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல், லுங்கி இங்கிடி வீசிய அதே ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் மீட்டெடுப்பனர் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் லுங்கி இங்கிடி வீசிய நான்காவது ஓவரின் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசி விராட் கோலி, அந்த ஓவரின் 4ஆவது பந்தில் எதிர்பாராதவிதாம ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ரசிகர்களின் மனதை உடைத்தார்.
அதன்பின் வந்த் தீபக் ஹூடாவும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவாது அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிடியின் அடுத்த ஓவரிலேயே ரபாடாவின் அபாரமான கேட்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக இந்திய அணி 49 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now