
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில் நடைபெற இருந்த இத்தொடரானது, அங்கு நடைபெற்ற உள்நாட்டு கலவரம் காரணமாக தற்சமயம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய மகளிர் அணியானது அக்டோபர் 04ஆம் தேதி துபாயில் நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இத்தொடரில் விளையாடவுள்ளது பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்பிரீத் கவுர் அணியின் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணைக்கேப்டனாகவும் இத்தொடரில் செயல்படுவார்கள் என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.