
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
அதேசமயம் இத்தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியானது 4 லீக் போட்டிகளில் இரண்டு வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதிலும் குறிப்பாக தங்களது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியுடன்ம் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடமும் என இந்திய அணி தோல்வியைத் தழுவியதன் கரணமாக லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்மன்பிரீத் கவுர் மீதான வீமர்சனங்களும் அதிகரித்ததுடன், அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்நிலையில் இந்திய மகளிர் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது அக்.24ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.