
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் 4ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோஹித் சர்மா தனது 51ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுப்பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷுப்மன் கில், துனித் வல்லாலகே வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 3 ரன்களிலும், 7 பவுண்டரி 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மாவும், துனித் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் இஷன் - கேஎல் ராகுல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.