Asian Games: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவருக்கான கிரிக்கெட் அரையிறுதிச்சிற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் விளையாடியது. இதில், 20 ஓவர்களில் அந்த அணி மொத்தமாக 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் 24 ரன்களும், தொடக்க வீரர் பர்வேஸ் ஹூசைன் எமான் 23 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியைப் பொறுத்த வரையில், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இவர்களுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஷாபாஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
Trending
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில், திலக் வர்மா, 26 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். திலக் வர்மா அரைசதம் அடித்ததைத் தொடர்ந்து ஜெர்சியை தூக்கி காட்டி, தனது அம்மாவின் டாட்டூவை வரைந்ததை காண்பித்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்திய அணி 9.2 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 97 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி நாளை காலை 11.30 மணிக்கு ஹாங்சோவில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now