
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடாரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் யு19 அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் யு19 அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
அதன்படி, நடப்பு யு19 மகளிர் உலகக்கோப்பை தொடரானது ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 02ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள நிலையில், அதில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளனர்.
இதில் இந்திய அணியின் குரூப் போட்டிகள் கோலாலம்பூரில் உள்ள பயாமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஜனவரி 19ம் தேதி எதிர்கொள்கிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நிக்கி பிரசாத் அணியின் கேப்டனாக தொடரும் நிலையில், அணியின் துணை கேப்டனாக சானிகா சால்கே நியமிக்கப்பட்டுள்ளார்.