
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா முதல் போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி பறிபோனது. அதனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் இத்தொடரின் கோப்பையை வென்று தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகத் தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்தியா 2வது போட்டியில் கொதித்தெழுந்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் 2ஆவது போட்டி செப்டம்பர் நாளை நாக்பூரில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் தங்களை தலைகுனிய வைத்த ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக ஏற்கனவே அங்கு சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அனல் பறக்க போகும் போட்டி நாக்பூரில் நடைபெறும் நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி வரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.