
ஆஸ்திரேலியாவில் த்ரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2ஆவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.
குறிப்பாக கடைசி பந்தில் சிங்கிள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் வெற்றிக்கான ரன்னை அடித்து த்ரில் வெற்றியை பெற்று தந்தார். கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த அந்த போட்டியை அடுத்து இந்திய அணி தனது 2ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இளம் வீரர்களை கொண்ட அந்த அணி தகுதிச்சுற்றில் முன்னணி அணிகளுக்கே சவால் கொடுத்துவிட்டு, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்றுக்கு செல்வது சற்று சுலபமாக இருக்கும். எனவே கத்துக்குட்டி அணியை வீழ்த்த ரோஹித் சர்மாவின் படை தயாராகி வருகிறது.