
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. மேற்கொண்டு தொடர் மழை காரணமாக மைதானம் முழுவது கவர் செய்யப்பட்டது. இதனால் போட்டி மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த எந்தவொரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதனால் மழை நின்ற பிறகு தான் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
மேலும் உலகிலேயே சிறந்த மழைநீர் வடிகால் உள்ள மைதானத்துக்கு பெயர் பெற்றது பெங்களூரு சின்னசாமி மைதானம். அதனால் மழை நின்றால் சிறிது நேரத்திலேயெ போட்டியை மீண்டும் தொடங்கும் வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்களும் முதல் நாள் போட்டிக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டத்தின் உணவு மற்றும் தேநீர் இடைவேளை என இரண்டு செஷன்களும் முழுமையாக கைவிடப்பட்டது.