
டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது. நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 2ஆவது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி வரும் 14ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
டி20 உலகக்கோப்பையை முடித்துவிட்டு அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வரும் 17, 19, 21 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி, இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது.