IND vs NZ, 3rd T20I: எங்களது தோல்விக்கு இதுதான் காரணம் - மிட்செல் சாண்ட்னர்!
எங்களுடைய இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார்.
பிரிதிவி ஷா பிளேயிங் லெவனில் எடுத்துவரப்படவில்லை. ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இரண்டு பேரும் மீண்டும் ஒருமுறை ஓப்பனிங் செய்தனர். ஒரு ரன்னில் இஷான் கிஷன் ஆட்டமிழக்க, அடுத்து உள்ளே வந்த ராகுல் திரிப்பாதி, வந்த வேகத்திலேயே அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியின் கியரை மாற்றினார்.
Trending
இவர் 22 பந்துகளில் 44 ரன்கள் அடித்து மிகச் சிறப்பாக டெம்போ செட் செய்துவிட்டு அவுட் ஆகினார். அதை பிடித்துக் கொண்ட ஷுப்மன் கில், 35 பந்துகளில் அரைசதம் கடந்தபின், அசுர வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்கள், ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில், டி20 போட்டிகளில் முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத ஷுப்மன் கில், 63 பந்துகளில் 126 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்தது.
இமாலய இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் உள்ளே வந்ததும் மீண்டும் பெவிலியன் திரும்புவதும் தெரியாத அளவிற்கு மோசமாக விளையாடினர். பவர் பிளே ஓவரில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு நியூசிலாந்து அணி தள்ளப்பட்டது.
அதன் பிறகு வந்த வீரர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, 12.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என டி20 தொடரையும் கைப்பற்றியது.
போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்ச்சல் சான்ட்னர், “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. இந்த போட்டிக்கு முன்பு வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இன்று வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பவர் பிளே ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டால் போட்டிக்குள் மீண்டும் வருவது மிகவும் கடினம். எதிர்பாராத வகையில் பந்து ஸ்விங் ஆனது. அதை எதிர்கொள்வதற்கு சேலஞ்சாக இருந்தது. மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏற்றவாறு மாறுவதற்கு முன்பே இந்திய அணியினர் தங்களது வேலையை முடித்து விட்டனர். எந்த இடத்திலும் எங்களை எழுந்திருக்க விடாமல் ஆதிக்கம் செலுத்தினர்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now