
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்ளில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கடைசி டி20 போட்டி மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை மறுதினம் (அக்டோபர் 4) நடக்கிறது.
இதையடுத்து, 3 ஒருநாள் போட்டிகளை இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டிகள் அக்டோபர் 6, 9, 11ஆம் தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ஷிகர் தவான் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட், ராஜத் பட்டீதர், ஷாபாஸ் அகமது, முகேஷ் குமார், ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.