பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் விதமாக முன்னணி அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.
அந்த வகையில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்திய மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் மெக் லெனிங், தஹிலா மெக்ராத், எல்லிஸ் பெர்ரி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
Trending
பின்னர் மறுமுனையில் நிதானமாக விளையாடிய பெத் மூனி 28 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வந்த கார்ட்னர் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்வரிசை வீராங்கனைகளும் சொதபினர். பின் இறுதியில் ஜெஸ் ஜோனாசென் - வேர்ஹாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரேகர், ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நட்சத்திர வீராங்கனைகள் ஜேமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ஷஃபாலி வர்மா 2, ரிச்சா கோஷ் 5, ஹர்லீன் டியோல் 12, யஷ்திகா பாட்டியா 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரேகர், ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 15 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now