யு19 உலகக்கோப்பை 2024: சச்சின் தாஸ், உதய் சஹாரன் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான அண்டர்19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அண்டர் 19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஸ்டீவ் ஸ்டோக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டோக் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் டீகர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் இணைந்த பிரிட்டோரியஸ் - ரிச்சர்ட் செலெட்ஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 76 ரன்கள் எடுத்திருந்த பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடந்து ஆலிவர் வைத்ஹெட் 26 அன்களிலும், திவான் மரைஸ் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களை எடுத்திருந்த ரிச்சர்டும் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்களையும், டிரிஸ்டன் லூஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கல் என 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அண்டர் 19 அணி 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரர் அதார்ஷ் சிங் தென் ஆப்பிரிக்க வீரர் குவேனா மபகா வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து அதிரடி வீரர் முஷீர் கான் 4 ரன்களிலும், அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பிரியன்ஷு மொலியா 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து டிரிஸ்டன் லூஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் உதய் சஹாரன் - சச்சின் தாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 171 ரன்களை பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தாஸ் 11 பவுண்டரி, ஒரு சிச்கர் என 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து வந்த அரவெல்லி அவனிஷ் 10 ரன்களுக்கும், முருகன் அபிஷேக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இந்திய அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் உதய் சஹாரன் 81 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி அண்டர்19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now