
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91ஆவது வருடாந்திர கூட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவி காலம் முடிவடைந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக 1983 உலக கோப்பை வென்ற அணியில் இடம் வகித்த முன்னாள் நட்சத்திர வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐயின் 36வது புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவருடன் துணைத்தலைவராக ராஜீவ் சுக்லா, துணை செயலாளராக தேவ்ஜித் சைக்கா, பொருளாளராக ஆஷிஷ் சீலர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இருப்பினும் செயலாளராக இருந்த ஜெய் ஷா தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கிறார்.
அந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு சௌரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்த நிலையில் சமீப காலங்களில் ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர் போன்ற முக்கிய வீரர்கள் அடிக்கடி காயமடைந்து உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிந்து முடிந்தளவுக்கு தடுத்து நிறுத்த முயற்சிக்க உள்ளதாக புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்தார்.