பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதா இந்திய அணி?
15 ஆண்டுகளுக்கு பின் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கலந்துகொள்ள பிசிசிஐ விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் அதன் மீதான எதிர்பார்ப்பும், அதற்கு கிடைக்கும் வரவேற்பும் வேற லெவலில் இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன.
2012ஆம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிக்கவில்லை.
Trending
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
அடுத்த ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. அதில் விளையாட பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு அனுமதி கொடுக்கவேண்டும். வரும் 18ஆம் தேதி பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அதில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐசிசி தொடர்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு 4 ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளன.
மகளிர் டி20 உலக கோப்பை - தென் ஆப்பிரிக்கா
மகளிர் அண்டர் 19 டி20 உலக கோப்பை - தென் ஆப்பிரிக்கா
ஒருநாள் உலக கோப்பை - இந்தியா
ஆசிய கோப்பை - பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் கலந்துகொள்வது குறித்தும் பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அதற்கு பிசிசிஐ தரப்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும். மத்திய அரசு அனுமதியளிக்கும் பட்சத்தில், 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடும்.
Win Big, Make Your Cricket Tales Now