
வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. ஏனெனில் தோனி தலைமையில் 2007இல் நடந்த வரலாற்றின் முதல் கோப்பையை வென்ற பின் நடைபெற்ற அத்தனை டி20 உலகக் கோப்பைகளிலும் வெறும் கையுடன் திரும்பிய இந்தியா கடந்த 2013 -க்குப்பின் எந்த ஒரு ஐசிசி உலகக்கோப்பையையும் தொட முடியாமல் திணறி வருகிறது.
அதைவிட கடைசியாக கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய விராட் கோலி தலைமையிலான இந்தியா அவமானத்தைச் சந்தித்தது.
எனவே இந்த தொடர் தோல்விகளுக்கு இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காக கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோஹிட் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தரமான வீரர்களை கண்டறிந்து வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.