
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது எதிவரும் அக்டோபர் 06ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரானது குவாலியர், டெல்லி மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில், டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.