
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டங்க்லி - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சோபியா டங்க்லி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸி ரன்கள் ஏதுமின்றி ரேனுகா சிங் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த அனுபவ வீராங்கனை நாட் ஸ்கைவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. பின் இவரும் தங்களது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 138 ரன்களைச் சேர்த்தனர்.