-mdl.jpg)
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், பூஜா வஸ்திரேகர் , ஷ்ரெயாங்கா பாட்டில் என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
அதுவரை அணியின் ஸ்கோரை உயர்த்த போராடி வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய மகளிர் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சார்லோட் டீன், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், சாரா கிளென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.