
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஷஃபாலியுடன் இணைந்த யஷ்திகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தயாளன் ஹேமலதாவும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷ்திகா பாட்டியாவும் 37 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - தேஜல் ஹசாப்னிஸ் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.