
நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா பிளிம்மர் 41 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லாரா டௌனும் 3 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் சோஃபி டிவைனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூஸி பேட்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய புரூக் ஹாலிடேவும் 8 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தார்.