
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் அதிரடியான தொடக்கத்தைப் பெற்ற கேப்டன் லாரா வோல்வார்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - அன்னேக் போஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய டிரையானும் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.