
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்களை குவித்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறித்தது. இதில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 205 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 149 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டெல்மி டக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் சுனே லூஸ் 65 ரன்களையும், மரிஸான் கேப் 74 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக அந்த அணி 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஃபலோ ஆனை தவிர்க்க தவறிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனை அன்னே போஷ்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அதன்பின் இணைந்த கேப்டன் லாரா வோல்வார்ட் - சுனே லூஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனே லூஸ் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இதில் இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனே லூஸ் தனது விக்கெட்டை இழந்தார்.