
இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்களைக் குவித்திருந்தது.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷும் 86 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.